வாழ்க்கை வரலாறு நூல்கள்

கனவுகளின் மிச்சம்

ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு

பக்கங்கள் 288
விலை ரூ.200



இதயமெல்லாம் நினைவுகளால் ததும்பி வழிந்தாலும் அடிப்பரப்பைத் தொட முடிகிறது. இந்தப் பாதாளக்கரண்டி அதிசயமானதுதான். அடியில் படிந்து போயிருக்கும் எனது முதல் நினைவு எது?
அறிவுஜீவிகளுக்கு வேறுவொரு நல்ல மார்க்கம் இருக்கிறது. அதுதான் அவர்களது  சிந்தனைகளைப் பதிவு செய்துவிட்டு போவது. அதன்மூலம் அவர்களது மரணத்திற்கு பிறகும் அவர்கள் வாழும் வாய்ப்பு இருக்கிறது. எத்தனையோ அறிவுஜீவிகள் அப்படியாக இப்போதும் வாழ்வதைக் காண்கிறோம். 

அதற்கு அவர்களது சிந்தனைகள் அப்படிப் பேசப்படும் அளவிற்கு தரமானவையாக இருக்க வேண்டும். அப்புறம் அந்தச் சிந்தனைகளை எதிரிகளது முயற்சிகளையும் மீறி அவற்றின் ஆதரவாளர்கள் தூக்கி நிறுத்த வேண்டும். என்னுடையவை அத்தகையவைதானா, அப்படி தூக்கி நிறுத்தப்படுமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும். நான் இல்லா உலகில் இப்படியாக நான் இருக்க ஆசைப்பட்ட விபரத்தை மட்டுமே இங்கு பதிவு செய்ய முடியும். 

ஓர் அறிவுஜீவியின் சிந்தனைகளில் ஒருவித ஒருமைத்தன்மை இருந்தால், ஓர் அடிநாதம் இருந்தால், ஒரு மையச் சரடு இருந்தால் அதுதான் அவனது கனவுகள்.  லட்சியங்களின் மறுபெயரே கனவு. அவற்றின் சாரமே லட்சியக் கனவுகள். தம் வாழ்நாளிலேயே அதை அடைந்தவர்கள் மிகச் சொற்பமே. கனவுகளின் மிச்சத்தை விட்டுச் செல்பவர்களே அதிகம். வரும் தலைமுறை அதை உள்வாங்கி தனது  சொந்தக் கனவை தரிக்கும் எனும் நம்பிக்கையோடு விடைபெறுகிற அறிவுஜீவிகளில் நானும் ஒருவன். 

-----------------------------------


வ.உ.சி.கடைசிக் காலத்தில்தடம் மாறினாரா?




வ.உ.சி. பிறந்த நாளை “சுயசார்பு நாளாகக்” கொண்டாடுவது என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முடிவு செய்த போது அவரைப்பற்றி அவ்வப்போது எழுப்பப்படுகிற அந்தக் கேள்வி என் நெஞ்சில் நிழலாடியது. காங்கிரஸ்காரராகிய அவர் கடைசிக் காலத்தில் பெரியாரின் பாதையில் நடைபோட்டாரா?- என்கிற கேள்வி.
இதற்காக அவரின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலானவை அவர் கப்பலோட்டியதற்கும் சிறைக்குச் சென்றதற்குமே முழு முக்கியத்துவம் கொடுத்திருந்தன. சிறை மீண்ட பிறகு அவர் 24 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். இந்தக் காலம் குறித்து அவை விரிவாகப் பேசவில்லை.
மேலே கூறப்பட்ட கேள்விக்கு விடைகாண வேண்டும் என்றால் அவரின் பிற்காலம் பற்றிய விபரங்கள் வேண்டும். நூல்கள் வேட்டையில் இறங்கினேன். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், பேரா. ஆ.சிவசுப்பிரமணியன், செ.திவான் ஆகியோர் இதற்குப் பேருதவி செய்தார்கள்.
அப்படியும் சில இடைவெளிகள் இருந்தன. பிராமண ரல்லாதார் இயக்கம் மற்றும் பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்துடனான வ.உ.சி.யின் தொடர்புகள், எதிர்வினைகள் பற்றியவை அவை. இதற்காகச் சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள ஆய்வு மைய நூலகம் சென்று “குடி அரசு” இதழ்களைப் பார்வையிட்டேன். பல புதிய செய்திகள் கிடைத்தன. குறிப்பாக, 1936 மே மாதத்தில் அவர் அனுப்பிய “விண்ணப்பம்” எனப்பட்டது. அது, இந்த நூல் மூலமாக இப்போதுதான் இந்தத் தலைமுறையினருக்கு தெரியவருகிறது என நினைக்கிறேன். “குடி அரசு” இதழ்களைப் பார்வையிட அனுமதி தந்த மானமிகு கலிபூங்குன்றனார் அவர்களுக்கும், ஆய்வு மைய நூலகருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“வரலாற்றுப் புலனாய்வு” வரிசையில் நான் எழுதிய நான்காவது நூல் இது. எனினும் காலவரிசைப்படி பார்த்தால் முதலில் படிக்க வேண்டியது இதுவே. இதைப் படித்து விட்டு “தி.மு.க: பிறந்தது எப்படி?”, “அண்ணா: ஆட்சியைப் பிடித்தது எப்படி?”,  “எம்.ஜி.ஆர்: நடிகர் முதல்வரானது எப்படி?” என்கிற இதர மூன்று நூல்களைப் படித்தால் இருபதாம் நூற்றாண்டின் முதல் 77 ஆண்டு கால வரலாறு உங்கள் கைப்பிடிக்குள்.






Comments